ஆந்திர மாநிலம் அனந்தபூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஸ்விக்கி டெலிவரி ஊழியர் பிளாட்பாரத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் ஆர்டர் செய்த உணவை வழங்குவதற்காக, அந்த ஊழியர் ரயிலின் குளிர்சாதனப் பெட்டிக்குள் ஏறியுள்ளார்.

 

ரயில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அங்கு நின்ற நிலையில், அவர் உணவை வழங்கிவிட்டு இறங்குவதற்குள் ரயில் நகரத் தொடங்கியுள்ளது. ரயிலின் வேகம் அதிகரித்ததால், அவசரமாகக் கீழே இறங்க முயன்ற அந்த ஊழியர் நிலைதடுமாறி நடைமேடையில் விழுந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, விநியோக ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஓடும் ரயில்களில் இத்தகைய ஆபத்தான முறையில் உணவை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்விக்கி நிறுவனம், அந்த ஊழியர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், ஓடும் ரயில்களில் ஏறுவதோ அல்லது இறங்குவதோ தங்களது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், விநியோக ஊழியர்களுக்கு மீண்டும் உரிய பாதுகாப்புப் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ரயிலின் நுழைவு வாயிலுக்கு வந்து உணவைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.