பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நகரில் பிச்சை எடுத்து வரும் ராஜு என்ற மாற்றுத்திறனாளி, கடும் குளிரால் வாடும் ஏழை எளிய மக்களுக்காக 500 போர்வைகளை வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சக்கர நாற்காலியில் அமர்ந்து பிச்சை எடுத்து வரும் அவர், தான் சேகரித்த ஒவ்வொரு 10 ரூபாயையும் சிறுகச் சிறுகச் சேர்த்து இந்த நற்பணியைச் செய்துள்ளார்.

 

முன்னதாக கொரோனா காலத்தின்போது ஏழைகளுக்கு முகக்கவசம் மற்றும் உணவு வழங்கியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடியால் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. வசதி படைத்தவர்கள் கூடச் செய்யத் தயங்கும் இத்தகைய உதவிகளை, மற்றவர்களிடம் கையேந்திப் பிழைக்கும் ஒருவர் செய்வது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கெனச் சொந்த வீடு கூட இல்லாத நிலையில், மாதம் 5000 ரூபாய் வாடகை வீட்டில் வசித்து வரும் ராஜு, இதுவரை சுமார் 50 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கும் நிதியுதவி செய்துள்ளார். ஒரு தேநீர்க் கடை நடத்தி வரும் அவர், தமக்கு வரும் வருமானத்தைக் கொண்டு தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்வதையே தனது லட்சியமாகக் கொண்டுள்ளார்.

இதையறிந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் விஸ்வ சர்மா, ராஜுவின் மனிதாபிமானத்தைப் பாராட்டியதோடு அவருக்கு நிரந்தரமாகத் தங்குவதற்கு இடம் ஒதுக்கித் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்துள்ளார். தன்னலமற்ற இச்சேவை, வாழ்க்கையில் வசதிகள் இருந்தும் உதவி செய்யத் தயங்குபவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது.