பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ‘அகில இந்திய கர்ப்பிணி வேலைவாய்ப்பு சேவை’ என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட விசித்திரமான சைபர் மோசடி கும்பலை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். குழந்தை இல்லாத பெண்களுக்குக் கருத்தரிக்க உதவினால் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, இந்தத் கும்பல் இளைஞர்களை ஏமாற்றி வந்துள்ளது.

இதற்காக முன்பதிவுக் கட்டணம் மற்றும் பாதுகாப்புத் தொகை எனப் பல நிலைகளில் ஆயிரக்கணக்கான ரூபாய்களைப் பறித்து வந்த நிலையில், ரகசியத் தகவலின் பேரில் ஹிசுவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீஸார் நடத்திய சோதனையில் இருவர் பிடிபட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மைனர் சிறுவன் என்பதும், மற்றொருவர் ரஞ்சன் குமார் என அடையாளம் காணப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களிடம் இருந்து நான்கு கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடி கும்பல் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களை இலக்காகக் கொண்டு லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது சமூக மற்றும் நெறிமுறை ரீதியாக மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் செயல் என்று குறிப்பிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் தீமான், இந்த மோசடி பின்னணியில் உள்ள மற்ற நபர்களைப் பிடிக்கத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

பணத்தாசை காட்டி மக்களை ஏமாற்றும் இத்தகைய போலி விளம்பரங்களை நம்பிப் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.