கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விதுராவில், திருமணமான பின்னரும் காதலைத் தொடர்ந்த ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைமுட்டம் பகுதியைச் சேர்ந்த சுபின் (28) மற்றும் ஆரியங்கோடு பகுதியைச் சேர்ந்த மஞ்சு (31) ஆகிய இருவரும் வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்திருந்தாலும், ஒருவரையொருவர் மறக்க முடியாமல் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இவர்களது தொடர்பு குறித்து குடும்பத்தாருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், விதுராவில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த இவர்கள், நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, இருவரும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

காதலைத் தொடர முடியாத விரக்தியில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களது உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போலீசார் இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.