விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தாமதமாவதற்கும், பிரதமர் மோடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

தணிக்கை குழுவின் வழக்கமான நடைமுறைகளால் ஏற்கனவே பல படங்களுக்கு இதுபோல தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் அரசியல் உள்நோக்கம் கற்பிப்பது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக 56 தொகுதிகளையும் அமைச்சரவையில் இடத்தையும் கோரியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அதிமுக தரப்பில் 25 முதல் 30 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களது முக்கிய நோக்கம் என்றும், யாருக்கும் பாஜக அழுத்தம் கொடுக்காது என்றும் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்ப்பது அதிமுகவின் தனிப்பட்ட முடிவு என்றும், அதில் தாங்கள் தலையிட முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

பாமக மற்றும் இதர கட்சிகளுடனான கூட்டணி குறித்தும் ஆலோசனைகள் நடந்து வருவதாகவும், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வரும்போது தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி முடிவு எட்டப்பட்டு அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.