உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் 14 வயது சிறுமி ஒருவரை உள்ளூர் யூடியூபர் மற்றும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் ஆகிய இருவரும் சேர்ந்து கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு தனது வீட்டிற்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்த அந்தச் சிறுமியை, மகேந்திரா ஸ்கார்பியோ வாகனத்தில் வந்த கும்பல் கடத்திச் சென்று, இரயில் தண்டவாளம் அருகே உள்ள ஆள் நடமாட்டமற்ற பகுதியில் வைத்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகச் சித்ரவதை செய்துள்ளனர்.

பின்னர் அந்தச் சிறுமியை மயங்கிய நிலையில் அவரது வீட்டின் அருகே விட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிவபரண் யாதவ் என்ற யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள உதவி ஆய்வாளர் அமித் குமார் மௌரியாவைத் தேட நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் உண்மைகளை மறைக்க முயன்றதாகவும், முறையாகப் புகார் பதிவு செய்யவில்லை என்றும் கூறி சச்செண்டி காவல் நிலைய ஆய்வாளர் விக்ரம் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மேற்கு மண்டல துணை ஆணையர் தினேஷ் சந்திர திரிபாதி அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் காவல் துறையினர் இந்த வழக்கை மூடி மறைக்க முயன்றதாகப் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், தற்போது கூடுதல் துணை ஆணையர் கபில் தேவ் சிங் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கான்பூர் காவல் ஆணையர் ரகுபீர் லால் உறுதியளித்துள்ளார்.