அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களான பாலகங்காதரன் மற்றும் சுப்புரத்தினம் ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பாலகங்காதரன் மற்றும் பழனி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சுப்புரத்தினம் ஆகிய இருவரும் அண்ணா அறிவாலயத்தில் தங்களை ஆளுங்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அனுபவம் வாய்ந்த முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் திமுகவை நோக்கி வருவது அக்கட்சியின் பலத்தை அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராகப் பார்க்கப்பட்ட பாலகங்காதரன், தொலைக்காட்சி விவாதங்களில் ஓபிஎஸ் தரப்பு நியாயங்களை உரக்கப் பேசி வந்தவர்.

அண்மைக்காலமாக ஓபிஎஸ் அணியின் முக்கிய முகமாக இருந்த அவர், திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி திமுகவில் ஐக்கியமாகியுள்ளது ஓபிஎஸ் தரப்பிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஓபிஎஸ் அணியிலிருந்து அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகள் சரிந்து வருவது, வரும் தேர்தலில் அந்த அணியின் செல்வாக்கை வெகுவாகப் பாதிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.