தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தங்கள் கட்சியின் கதவுகள் அனைவருக்கும் திறந்து இருப்பதாகக் கூறி, ஆட்சியில் பங்கு என்ற வாக்குறுதியை அளித்து வருவது தேர்தல் நேரத்து ‘சலுகை விற்பனை’ (Offer) போன்றது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடுமையாகச் சாடியுள்ளார்.
தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்கு வணிக நிறுவனங்கள் ஆஃபர் வழங்குவதைப் போல, தனித்து நின்று ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையற்ற நிலையில், கூட்டணிக்காக விஜய் இத்தகைய கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு காத்துக் கொண்டிருப்பதாக அவர் விமர்சித்தார். கொள்கை தெளிவற்ற இத்தகைய அரசியல் அணுகுமுறை, முதிர்ச்சியற்ற போக்கையே காட்டுவதாகவும், அதிகாரப் பகிர்வு குறித்து தற்போது பேசுவது தேர்தலுக்கான ஒரு தற்காலிக உத்தி மட்டுமே என்றும் அவர் தனது கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.
