ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் அத்தலி பகுதியில் உள்ள மாடூடி காலனியில், வளர்ப்பு நாய் ஒன்று 8 பேரை கடித்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த நாயை அடித்துக் கொன்ற கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நாயின் உரிமையாளர் நாயைத் தலைகீழாகப் பிடித்துக் கொள்ள, மற்றவர்கள் மூங்கில் தடிகளால் அதைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கிருந்த பெண் ஒருவர் இந்த வன்முறையைத் தடுக்க முயன்றும் பலனின்றிப் போன நிலையில், நாய் கடித்ததால் தங்களுக்கு ஏற்பட்ட காயங்களையும் அங்கிருந்தவர்கள் வீடியோவில் காண்பித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு விசாரணையின் போது, ஒரு நாய் கடிக்கும் மனநிலையில் உள்ளதா இல்லையா என்பதை யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள சூழலில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களிலிருந்து தெருநாய்களை அகற்றுவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதுடன், நாய்களின் குணாதிசயங்களைக் கண்டறிவது கடினமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.