உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த சூரஜ் பாண்டே என்பவர் கான்பூர் தாதா நகரில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான சூரஜ் பாண்டே, அங்கு பணியாற்றிய ஒரு பெண்ணுடன் நட்புறவு கொண்டு அடிக்கடி அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பெண்ணிற்குப் புத்தாடைகள் வாங்கித் தருவதற்காக அவரை ரயில்வே தண்டவாளம் அருகே சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ரயில் மோதி சூரஜ் பாண்டே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உயிரிழந்தவரை அங்கேயே விட்டுவிட்டு யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் வீட்டிற்குச் சென்று மறைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சூரஜ் பாண்டேவின் கைபேசி மூலம் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதில் கடைசியாகப் பதிவான அழைப்புகளைக் கொண்டு அந்தப் பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நடந்த உண்மைகளை அவர் ஒப்புக்கொண்டார். பெற்றோருக்கு ஒரே மகனான சூரஜ் பாண்டேவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டிய போதிலும், இதுவரை எவ்விதப் புகாரும் அளிக்காமல் சடலத்தைப் பெற்றுக்கொண்டு தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். இருப்பினும், உயிரிழப்பு குறித்துக் காவல்துறையினர் தங்களது கோணத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.