சர்வதேச சந்தையில் நிலவி வரும் பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களால், வரும் மார்ச் மாதத்திற்குள் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 5,000 டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொடும் என உலகப் புகழ்பெற்ற முதலீட்டு வங்கியான யுபிஎஸ் (UBS) கணித்துள்ளது.
தங்கத்தின் விலை இனி குறைய வாய்ப்பில்லை என்றும், வரும் மாதங்களில் அது ஏறுமுகமாகவே இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து யுபிஎஸ் வங்கியின் கமாடிட்டி பிரிவு தலைவர் டொமினிக் ஷ்னீடர் கூறுகையில், “உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை இருப்பு வைத்து வருவதும், சர்வதேச அரசியல் பதற்றங்களும் விலை உயர்வுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. குறிப்பாக அமெரிக்கா – வெனிசுலா இடையிலான அரசியல் சூழல் உலகச் சந்தையில் ஒருவித நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இதனால் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தை நோக்கி முதலீட்டாளர்கள் படையெடுக்கின்றனர்” என்றார்.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் விண்ணைத் தொடும் வகையில் உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் அதன் விலை உயர்ந்து ஒரு அவுன்ஸுக்கு 80 டாலர் என்ற வரலாற்றுச் சாதனை விலையை எட்டியுள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டும் 9 நாட்கள் வெள்ளி விலை உயர்வுடன் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் சரிந்து வருவதால், அங்கு பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவும் தங்கம் விலையேற்றத்திற்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. தற்போது ஜனவரி மாத டெலிவரிக்கான தங்கம் விலை அவுன்ஸுக்கு 4,482 டாலராக முடிவடைந்துள்ளது, இது வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச விலையாகும்.
2026-ஆம் ஆண்டின் இறுதியில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 4,800 டாலராகச் சற்று குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், இது முந்தைய கணிப்புகளை (4,300 டாலர்) விட அதிகமாகும். எனவே, நீண்ட கால அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டாளர்களுக்கு இது ஒரு பொற்காலமாகவே இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
