தமிழக அரசு பொங்கல் பரிசாக வழங்கும் தொகையை மீண்டும் டாஸ்மாக் கடைகள் மூலமாகவே மக்களிடமிருந்து திரும்பப் பெறுகிறது என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வயலப்பாடி பகுதியில் பா.ம.க. (அன்புமணி அணி) சார்பில் ‘சிங்கப் பெண்ணே எழுந்து வா’ என்ற தலைப்பில் மகளிர் உரிமை மீட்புப் பயணம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சவுமியா அன்புமணி பேசியதாவது:

“திமுக அரசு மிகப்பெரிய திட்டங்களை அறிவிப்பது போலக் காட்டி, அவற்றை முறையாகச் செயல்படுத்தாமல் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வரிப்பணத்தையே அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு, அந்தப் பணத்தை அப்படியே டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் மீண்டும் அரசே வசூலிப்பதுதான் இந்தத் திட்டத்தின் உண்மையான நோக்கமாக உள்ளது.”

“ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல், பொய் வாக்குறுதிகளை மட்டுமே திமுக வழங்கி வருகிறது. பொதுமக்களை வெறும் ‘ஓட்டுப் போடும் இயந்திரங்களாக’ மட்டுமே இந்த அரசு கருதுகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக்கை ஒழித்து, ஏழை எளிய விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க வேண்டுமானால், நீங்கள் அனைவரும் அன்புமணி ராமதாஸ் பக்கம் நிற்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் பாமக மட்டுமே உறுதி செய்யும்,” என்று அவர் பேசினார்.

மேலும் தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3,000 அறிவித்துள்ள நிலையில், அதனை விமர்சித்து பாமக தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.