தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் அதிகார அரசியல் மற்றும் கூட்டணி அணுகுமுறை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ‘ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கமே 2026 தேர்தல் களத்தைத் தீர்மானிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

தனது ‘எக்ஸ்’  தளத்தில் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள விரிவான பதிவில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் இன்று ஆண்ட கட்சியோ அல்லது ஆளும் கட்சியோ தனித்து 40 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் இல்லை. கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கிகளை வைத்தே இவர்கள் அதிகாரப் பாதையில் பயணிக்கின்றனர். கூட்டணி கட்சிகளின் வாக்குகளைக் கொண்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, அவர்களை அடிமைகளைப் போல நடத்தும் திமுகவின் ‘தந்திர அரசியல்’ இனி தமிழகத்தில் எடுபடாது.”

கடந்த 2024 மக்களவைத் தேர்தல் வெற்றியைச் சுட்டிக்காட்டிய அவர், “கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் வெற்றி பெற்றிருக்க முடியாது எனப் பெருமை பேசிய திமுக, சட்டமன்றத் தேர்தலில் மட்டும் அதிகாரப் பகிர்வை மறுப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள கணக்கீடு:

  • திமுக: போட்டியிட்ட 22 இடங்களின்படி பார்த்தால், 132 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே முன்னிலை.

  • கூட்டணி கட்சிகள்: எஞ்சிய 102 இடங்களில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளே வெற்றிக்குக் காரணமாக இருந்துள்ளன. தேவைப்படும்போது கூட்டணிக் கட்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் அவர்களைத் தூக்கி எறிவது திமுகவின் ‘பண்ணையார் மனநிலை’யையே காட்டுகிறது என அவர் சாடியுள்ளார்.

“ஆட்சியில் பங்கு கேட்பவர்களை ஆர்.எஸ்.எஸ். அல்லது பா.ஜ.க. என்று முத்திரை குத்தி திமுக இனி தப்பித்து விட முடியாது. கடந்த தேர்தலில் ஒரு இஸ்லாமிய வேட்பாளரைக் கூட நிறுத்தாத திமுக, சிறுபான்மையினரின் காவலன் என்ற முகமூடியைப் பயன்படுத்த முடியாது. ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் காலம் கனிந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஒரே குடும்பம், ஒரே கட்சி என்ற அதிகார மமதையில் கூட்டணிக் கட்சிகளை அடிமை சாசனம் எழுதிக் கேட்கும் போக்கு மாற வேண்டும். ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற சுயமரியாதை முழக்கமே 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும்” என்று ஆதவ் அர்ஜுனா தனது பதிவில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளிடையே விவாதம் எழுந்துள்ள நிலையில், தவெக தரப்பிலிருந்து வந்துள்ள இந்த விமர்சனம் திமுக கூட்டணிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.