தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் ‘ஆட்சியில் பங்கு’ குறித்த விவாதம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ள விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் சகோதரர்களைப் போன்றவர்கள். கூட்டணி குறித்த முடிவுகளை அவர்களே எடுப்பார்கள். மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஆட்சியில் பங்கு வேண்டும் எனக் கருத்து தெரிவிக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்த கருத்துக்குப் பதில் அளிக்கும் வகையில், மாணிக்கம் தாகூர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்டாலின் – ராகுல் இடையிலான நட்புறவு குறித்த கருத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை என்ற ஆர்.எஸ்.பாரதியின் கூற்றை மட்டும் ஆதாரத்துடன் மறுத்துள்ளார்.

 

சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் ஏற்கனவே அளித்த பேட்டியின் செய்தித்தாள்ப் பகுதியை மாணிக்கம் தாகூர் பகிர்ந்துள்ளார். அந்தச் செய்தியில் ராஜேஷ்குமார், “ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல, அதுவே ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் விருப்பமாகவும் உள்ளது” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து ‘ஆட்சியில் பங்கு’ குறித்துப் பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவரின் கருத்தை, காங்கிரஸ் எம்.பி. ஒருவர் பொதுவெளியில் மறுத்துப் பதிவிட்டது, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இடப்பகிர்வு மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த ஆரம்பக்கட்ட மோதலோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.