திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குமரன்குன்று பதிருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அரசு நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோயில் அகற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசியை அடுத்த ராக்கியாபட்டி பகுதியில், சுமார் 2.8 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் ‘செல்வ முத்து குமாரசாமி’ என்ற கோயில் கட்டப்பட்டிருந்தது. இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டே நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இன்று வட்டாட்சியர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அந்த கோயில் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
கோயில் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக சில போலீசார் கால் இடறி சாலையோரப் பள்ளத்தில் விழுந்ததால் அங்கு பதற்றம் அதிகரித்தது. இந்த சம்பவத்தை அடுத்து இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டதால், அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
