அமெரிக்கா மற்றும் கொலம்பியா நாடுகளுக்கு இடையிலான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்ததைத் தொடர்ந்து, அடுத்த இலக்கு கொலம்பியா தான் என டொனால்ட் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
கொலம்பியா ஒரு “வியாதி பிடித்த நாடு” என்றும், அதன் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அமெரிக்காவிற்கு போதைப்பொருட்களைக் கடத்துவதாகவும் ட்ரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். கொலம்பியாவில் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு, “அது நல்ல யோசனையாகத் தெரிகிறது” என்று ட்ரம்ப் பதிலளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப்பின் இந்த மிரட்டலுக்குப் பதிலடி கொடுத்துள்ள கொலம்பியா அதிபர் பெட்ரோ, “என்னை வந்து பிடியுங்கள், நான் இங்கேதான் காத்திருக்கிறேன்” என எக்ஸ் (X) தளத்தில் சவால் விடுத்துள்ளார். தனது ஆட்சியில் தான் உலக வரலாற்றிலேயே அதிக அளவு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் வாதிடுகிறார்.
அதேசமயம், அமெரிக்காவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஒரு நாட்டின் அதிபரையே அமெரிக்கா கைது செய்த நிலையில், அடுத்ததாகத் தம்மீது நடவடிக்கை பாயுமா என்ற அச்சம் கொலம்பியாவில் எழுந்துள்ளது.
