மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவனப் பகுதியில் ஒட்டுமொத்த உலகையும் உறைந்து போகச் செய்யும் நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மாலி நாட்டில் நடைபெற்ற ஒரு ஆன்மீக வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, நைஜர் நாட்டைச் சேர்ந்த பயணிகள் லாரி ஒன்றில் தங்களது தாயகம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த லாரி நைஜர்-அல்ஜீரியா எல்லைக்கு அருகே உள்ள ‘அசமகா’ (Assamaka) பகுதியில் இருந்து மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் வந்தபோது, எதிர்பாராதவிதமாகப் பழுதாகி பாலைவன மணலுக்குள் சிக்கிக் கொண்டது.
ஓட்டுநரும் பயணிகளும் எவ்வளவோ போராடியும் வாகனத்தை சரிசெய்ய முடியவில்லை. அத்துடன் அவர்கள் கையில் வைத்திருந்த அத்தியாவசிய உணவு மற்றும் குடிநீரும் தீர்ந்துபோனது. சுற்றிலும் மனித நடமாட்டமே இல்லாத அந்தப் பெருவெளியில், சுட்டெரிக்கும் கத்தரி வெயிலின் உக்கிரம் தாங்காமலும், குடிக்க ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காமலும் 49 பயணிகள் சம்பவ இடத்திலேயே தாகத்தால் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தக் கோரமான சூழ்நிலையில், மரணத்தின் விளிம்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இரண்டு பயணிகள் மட்டும், தங்களின் தாகத்தையும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 50 கிலோமீட்டருக்கும் மேல் பாலைவன மணலில் நடந்து சென்று ஒரு நீர்நிலையைக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு தங்களின் உயிரைக் காத்துக் கொண்டதுடன், அசமகா பகுதிக்குச் சென்று இந்தத் துயரச் செய்தியை அதிகாரிகளிடம் கொண்டு சேர்த்துள்ளனர்.
தகவலறிந்து மீட்புப் படையினருடன் சம்பவ இடத்திற்குச் சென்ற அகதேஸ் பிராந்திய ஆளுநர் ஜெனரல் இப்ரா பவுலாமா இசா தலைமையிலான குழுவினர், லாரியின் அருகிலும் அடியிலும் சிதறிக் கிடந்த 49 பேரின் அழுகிய உடல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் சர்வதேச நெறிமுறைகளின்படி அங்கேயே ஒரு பொதுப் புதைகுழியில் பெருத்த சோகத்துடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக நைஜர் நாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. புலம்பெயர்வோரின் மரண வழித்தடமாக மாறிவரும் சகாரா பாலைவனத்தின் இந்த கொடூரப் பின்னணி தற்போது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
