அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாகவே கடுமையான மோதல்களும், ராணுவத் தாக்குதல்களும் தொடர்ந்து வரும் நிலையில், தற்பொழுது மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவுக்கு எதிராகத் தங்களுக்கு ஒரு மிகப்பெரிய ராணுவ வெற்றி கிடைத்துள்ளதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ராணுவ ஆலோசகரான மொஹ்சென் ரஜாய் என்பவர் சிஎன்என் (CNN) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அதிரடியாக உரிமை கொண்டாடியுள்ளார்.
கடந்த 47 ஆண்டுகால வரலாற்றில் ஒவ்வொரு முறையும் அமெரிக்காவிடம் தோற்றுப் போன ஈரான், தற்பொழுதுதான் முதல்முறையாகப் போர் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு இரு நாடுகளுக்கு இடையே தற்காலிகமாகப் போர் நிறுத்தப்பட்டிருந்தாலும், அது பெயரளவிற்கே உள்ளதாகவும், முழுமையான அமைதி ஏற்பட வேண்டுமானால் அமெரிக்காவிடம் ஒரு முக்கிய நிபந்தனையை விதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 24 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், முதற்கட்டமாக 12 பில்லியன் டாலரையும், அடுத்த கட்டமாக மீதி 12 பில்லியன் டாலரையும் அமெரிக்கா தர வேண்டும் என்றும் அவர் டிமாண்ட் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு இதுவொரு மிகப்பெரிய சோதனைக் காலம் என்று குறிப்பிட்டுள்ள ஈரான் ஆலோசகர், ஒருவேளை அமெரிக்கா மீண்டும் தங்கள் மீது போரைத் தொடுத்தால், அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது மிகக் கொடூரமான தாக்குதல் நடத்துவோம் என்றும், இந்த வளைகுடாப் போர் செங்கடல் முதல் மத்திய தரைக்கடல் வரை காட்டுத்தீ போலப் பரவிவிடும் என்றும் அமெரிக்காவுக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
