மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில மாதங்களாகப் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தடையை நீக்க ஈரான் மற்றும் அமெரிக்கத் தூதுக்குழுக்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவொரு சுமுகமான தீர்வும் எட்டப்படவில்லை. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் உலுக்கும் வகையில் ஈரான் தனது அடுத்த அதிரடி அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது.
சர்வதேச அளவில் மிக முக்கியக் கடல் வர்த்தகப் பாதையாகவும், செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கியப் புள்ளியாகவும் விளங்கும் ‘பாப்-எல்-மந்தேப் ஜலசந்தி’ பகுதியை முற்றிலுமாக மூடப்போவதாக ஈரான் நேரடி மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானின் இந்த அறிவிப்பால் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என சர்வதேச எரிசக்தி நிபுணர்கள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.
‘ஹார்முஸ் ஜலசந்தி’ பகுதியில் ஏற்பட்ட மோதலால் எண்ணெய் ஏற்றுமதி குறைந்ததைத் தொடர்ந்து, ‘பாப்-எல்-மந்தேப்’ பாதையே உலக நாடுகளுக்குப் பெரும் விடிவெள்ளியாக இருந்தது. ‘கெப்ளர்’ நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழியே தினமும் 3.9 மில்லியன் பேரல் எண்ணெய் கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதத்தில் அது 7.2 மில்லியன் பேரலாக உயர்ந்தது. சவுதி அரேபியா தனது ‘கிழக்கு-மேற்கு’ குழாய் வழித்தடத்தைப் பயன்படுத்தி கச்சா எண்ணெயைச் செங்கடல் வழியே திருப்பி, இந்த ‘பாப்-எல்-மந்தேப்’ பாதை வழியாகவே இந்தியா, ஜப்பான், தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுக்கு தடையின்றி அனுப்பி வந்தது.
ஆனால், தற்போது இஸ்ரேல் தனது காசா மற்றும் லெபனான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தாவிட்டால், இந்தப் பாதையை எந்த நேரத்திலும் மூடுவோம் என ஈரானின் புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளது. மேலும், அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டுமானால், லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் முற்றிலும் வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையையும் ஈரான் விதித்துள்ளது. ஒருவேளை இந்தப் பாதை மூடப்பட்டால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் விண்ணைத் தொடும் என்றும், இதனால் ஆசிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கடுமையான பணவீக்கம் ஏற்படும் என்றும் அஞ்சப்படுகிறது.
