சீனாவின் கிழக்கு ஜியாங்சு மாகாணம், ஃபெங்சியான் மாவட்டத்தில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் பிஞ்சு குழந்தைகளிடம் ஆசிரியை ஒருவர் காட்டிய கொடூர முகம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வகுப்பறையில் பாடம் நடத்தும்போது சில குழந்தைகள் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சென் என்ற பெண் ஆசிரியை, தண்டிப்பதற்காகக் குழந்தைகளை வரிசையாக நிற்க வைத்துள்ளார். வகுப்பறை சிசிடிவி காட்சிகளின்படி, அந்த ஆசிரியை முதலில் ஒரு சிறுவனின் உள்ளங்கையில் சூடான ‘க்ளூ கன்’ (Glue Gun – கைவினைப் பொருட்களுக்குப் பயன்படுத்தும் ஒட்டும் கருவி) மூலம் சுட்டுள்ளார்.

அந்தச் சிறுவன் வலியால் கையை பின்னுக்கு இழுத்ததும், அவனை அடித்து விரட்டியுள்ளார். அதற்கடுத்து, 4 வயது சிறுமி ஒருத்தியை தரதரவென இழுத்து வந்து, அவள் தப்பிக்க முயன்றதையும் பொருட்படுத்தாமல், அவளது மேல் உதட்டில் இரண்டு முறை அந்தப் பழுக்கக் காய்ந்த க்ளூ கன்னால் சுட்டுக் கொடூரம் காட்டியுள்ளார். இந்தச் சம்பவம் நடக்கும்போது அருகில் மற்றொரு ஆண் ஆசிரியர் இருந்தும், அவர் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்று மாலை வீட்டிற்குச் சென்ற அந்தச் சிறுமிக்கு உதட்டில் கொப்புளங்கள் ஏற்பட்டு, அதிலிருந்து சீழ் வடியத் தொடங்கியுள்ளது. வலியால் குழந்தை அலறித் துடித்ததைக் கண்டு பதறிய பெற்றோர், அவளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசாருடன் இணைந்து சிசிடிவி காட்சிகளைப் பார்த்த சிறுமியின் தாய் ஜவ், கதறியுள்ளார். “ஒரு 4 வயது குழந்தை அப்படி என்ன பெரிய தவறு செய்துவிட முடியும்? என் மகளிடம் காட்டுவதற்கு எப்படி இந்த ஆசிரியைக்கு இவ்வளவு கொடூர மனம் வந்தது?” என்று கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலில் இச்சம்பவத்தை மறைக்க முயன்ற ஆசிரியை, குழந்தை தனக்குத்தானே காயம் ஏற்படுத்திக் கொண்டதாகவும், பின்னர் தற்செயலாக நடந்துவிட்டது என்றும் மாற்றி மாற்றிப் பொய் கூறியுள்ளார். தற்போது அந்த ஆசிரியை பணியிடை நீக்கம்  செய்யப்பட்டு, போலீசார் அவரைத் தீவிரமாகக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சீனாவில் இது போன்ற குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் சமீபகாலமாக அதிகரித்து வருவது உலக அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.