மேற்கத்திய நாடுகள் இயற்கை வளங்களைத் திருடுவதால் வளரும் நாடுகள் ஏழ்மையில் வாடுவதாகச் சொல்லப்படும் கருத்தை அரசியல் விமர்சகர் லாரன் சென் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வளரும் நாடுகள் ஏழையாக இருப்பதற்கு மேற்கத்திய நாடுகள் காரணம் அல்ல என்றும், அந்த நாடுகள் தங்களிடம் உள்ள வளங்களைச் சரியாகப் பயன்படுத்தத் தவறியதே அடிப்படைப் பிரச்சனை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு உதாரணமாக ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வெனிசுலாவைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பல நாடுகள் தங்களிடம் உள்ள வளங்களைச் சுத்திகரிக்கவோ அல்லது முறையாகப் பயன்படுத்தவோ இயலாத நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

லாரன் சென்னின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க் இதற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். சென்னின் கருத்தைப் பகிர்ந்துள்ள மஸ்க், இது ஒரு கசப்பான உண்மை என்று பதிவிட்டுள்ளார்.

இயற்கை வளங்கள் ஒரு நாட்டில் அதிகமாக இருந்தாலும், அந்த வளங்களை நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் திறமை இல்லாததே பல நாடுகள் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் என இவர்களின் கருத்துக்கள் வழிமொழிகின்றன.