சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மைல்கல்லாக விளங்குவது 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் விளாசிய 6 சிக்ஸர்கள். இங்கிலாந்து அணியின் ஆண்ட்ரூ பிளின்டாஃப் செய்த வம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இளம் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ராட் வீசிய 19-வது ஓவரின் அனைத்துப் பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றி யுவராஜ் வரலாற்றுச் சாதனை படைத்தார்.

வெறும் 12 பந்துகளில் அரைசதம் கடந்து உலகையே வியக்க வைத்த யுவராஜின் அந்த ஆக்ரோஷமான ஆட்டம், ப்ராடின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்றே பலரும் கருதினர். ஆனால், அந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட ப்ராட், பின்னாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரராக உருவெடுத்தார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்தச் சம்பவம் குறித்து மனம் திறந்துள்ள ஸ்டூவர்ட் ப்ராட், யுவராஜ் சிங்கின் அந்த 6 சிக்ஸர்கள் தான் தனது நீண்ட கால வெற்றிப் பயணத்திற்கு அடித்தளமிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

“அன்று நான் முறையாகத் தயாராகாமல் களமிறங்கியதே அந்தத் தோல்விக்குக் காரணம்; எங்கே பந்து வீசுவது என்ற தெளிவு என்னிடம் இல்லை” என்று ஒப்புக்கொண்ட அவர், அந்த வலி மிகுந்த அனுபவம் தன்னை ஒரு ‘போர்வீரனைப் போல’ (Warrior Mode) மாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

21 வயதில் சந்தித்த அந்தப் பின்னடைவு தன்னை அறிவுப்பூர்வமாகச் செதுக்கியதாகவும், அதன் பின்னர் ஏற்பட்ட மன உறுதிதான் 600-க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தத் தூண்டுகோலாக இருந்ததாகவும் ப்ராட் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.