ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஆஷ்லே கார்ட்னெர், இந்திய அணியின் அபார வளர்ச்சியைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவையும், இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இந்தியா முதன்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர்ந்தது. இந்த வெற்றி இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கவுள்ள பெண்கள் பிரீமியர் லீக் (WPL 2026) தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாட ஆஷ்லே கார்ட்னெர் மும்பை வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய அணி மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இந்திய அணியை வெல்வது என்பது எந்த ஒரு அணிக்கும் மிகவும் கடினமான காரியமாக இருக்கும். ஆஸ்திரேலியராக இதைப் பார்க்கும்போது சற்று பயமாக இருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டு இவ்வளவு வேகமாக வளர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியாவே உலகின் சிறந்த அணி என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நெருக்கடியான நேரங்களில் இந்தியா தரும் சவால் வியக்க வைக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.