இந்திய கிரிக்கெட் அணியின் ‘உலகக்கோப்பை நாயகன்’ யுவராஜ் சிங், தனது புற்றுநோய் பாதிப்பின் போது மருத்துவர்கள் அளித்த அதிர்ச்சிகரமான எச்சரிக்கை குறித்தும், அதிலிருந்து மீண்டு வந்த மன உறுதி குறித்தும் உருக்கமாக பேசியுள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பை ஆகிய இரண்டிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல யுவராஜ் சிங் முக்கிய காரணமாக இருந்தார். குறிப்பாக, 2011 தொடரின் போது ரத்த வாந்தி எடுத்த போதிலும், தனது உடல்நிலையை பொருட்படுத்தாமல் நாட்டுக்காக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்றார். சென்னையில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் கடுமையான வெயிலால் பாதிக்கப்பட்ட போதும், அவர் பின்வாங்கவில்லை.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சிகிச்சை காலம் குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:

“எனது நுரையீரல் மற்றும் இதயத்திற்கு இடையே இருந்த கட்டி, நரம்பு மண்டலத்தை அழுத்திக் கொண்டிருந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், நான் 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே உயிர் வாழக்கூடும் என்றும் மருத்துவர்கள் கூறினர். இறக்கப் போகிறோம் என்ற எண்ணம் அப்போது ஆட்கொண்டது.”

7 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்த நேரத்தில் இந்த பாதிப்பு உறுதியானது யுவராஜுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது, மருத்துவர் என்ஹார்ன் அளித்த, “நீங்கள் இங்கிருந்து புற்றுநோய் இல்லாத மனிதராகத் தான் வெளியே செல்வீர்கள்” என்ற வார்த்தைகள் தனக்கு நம்பிக்கையளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது சாத்தியமில்லை என்று பலரும் விமர்சித்த நிலையில், கடின உழைப்பால் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார். 2019-ல் ஓய்வு பெறும் வரை பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்த அவர், “உலகம் முடியாது என்று சொன்னதை, சாதித்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியமே என்னை மீண்டும் களத்திற்கு கொண்டு வந்தது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயை வென்று சாதனை படைத்த யுவராஜ் சிங்கின் இந்த உத்வேகமான பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.