உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், பிரபல பாலிவுட் படமான ‘தூம்-3’ பாணியில் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டு வந்த இருசக்கர வாகனத் திருட்டுக் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர்கள் அர்மான் (என்கிற சுட்டா) மற்றும் உல்மான் என்ற இரட்டைச் சகோதரர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதையே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஒருவர் வாகனத்தைத் திருடச் செல்லும்போது, அதே போன்ற ஆடையை அணிந்த மற்றொரு சகோதரர் தனது பழைய இரும்பு வியாபாரக் கடையில் அமர்ந்து கொள்வார்.

ஒருவேளை போலீஸாருக்குச் சந்தேகம் வந்து விசாரணை நடத்தினால், திருட்டில் ஈடுபட்ட நபர் கடையில் இருந்ததாகக் கூறி போலீஸாரை எளிதில் ஏமாற்றி வந்துள்ளனர்.

தலைநகர் டெல்லி மற்றும் நொய்டா உள்ளிட்ட என்.சி.ஆர் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை நோட்டமிட்டு இந்த கும்பல் திருடி வந்துள்ளது.

கைதானவர்களிடமிருந்து சுமார் ₹15 லட்சம் மதிப்பிலான 15 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஏராளமான உதிரி பாகங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். திருடப்பட்ட வாகனங்களை உடனடியாகத் தங்களது பழைய இரும்புக்கடைக்குக் கொண்டு செல்லும் இவர்கள், அங்கு வாகனங்களை உதிரி பாகங்களாகப் பிரித்து அதிக விலைக்கு விற்றுள்ளனர்.

ஒரு சில வாகனங்களை அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு சென்று குறைந்த விலைக்கு விற்று வந்துள்ளனர். ஷதாப் மற்றும் விஜய் ஆகிய மேலும் இரு கூட்டாளிகளுடன் சேர்ந்து இவர்கள் இந்த மோசடியைச் செய்து வந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.