லண்டனைச் சேர்ந்த 30 வயதான கென்னி ஈதன் ஜோன்ஸ், தனது சகோதரிக்காக செய்த மிகப்பெரிய தியாகம் இணையத்தில் பலரது இதயங்களை வென்றுள்ளது. கென்னியின் சகோதரி கிஸ்ஸி ஜோன்ஸ் நீண்ட காலமாகத் தாயாக வேண்டும் என்று கனவு கண்டு வந்தார்.
ஆனால், உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அவருக்குத் தொடர்ந்து கருச்சிதைவு ஏற்பட்டு வந்தது. அவரது கருமுட்டைகளின் தரம் குறைவாக இருந்ததே இதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறினர். ஒரு ஆணாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கென்னி, கடந்த 10 ஆண்டுகளாக இதற்கான ஹார்மோன் சிகிச்சையில் இருந்தார்.
ஆனால், தனது சகோதரியின் தாய்மை கனவை நனவாக்க, தனது பாலின மாற்ற சிகிச்சையையே பாதியில் நிறுத்த அவர் முன்வந்தார். சிகிச்சையை நிறுத்துவது கென்னிக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் சவால்களை ஏற்படுத்தினாலும், தனது சகோதரியின் மகிழ்ச்சிக்காக அவர் அந்த வலியைப் பொறுத்துக்கொண்டார்.
கென்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கருமுட்டைகள் மூலம் தற்போது ஆறு ஆரோக்கியமான கருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கென்னியின் சகோதரி விரைவில் தாயாகப் போகிறார்.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் கென்னியை “சூப்பர் சகோதரர்” என்று பாராட்டி வருகின்றனர். குடும்ப பாசத்திற்காகத் தனது அடையாளத்தையே தியாகம் செய்த கென்னியின் செயல் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
