விளையாட்டிற்காக நண்பனின் கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் இணையதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோவில், ஒரு இளைஞன் தனது நண்பனின் கையில் பெட்ரோலை ஊற்றி, வேடிக்கைக்காக தீக்குச்சியால் பற்ற வைக்கிறான்.

அடுத்த சில நொடிகளில் தீ மளமளவென கையில் பரவி எரியத் தொடங்கியதும், அந்த இளைஞன் வலியால் துடிப்பதையும் தீயை அணைக்கப் போராடுவதையும் காண முடிகிறது. “நண்பர்களுடன் ஜாலியாக இருக்கிறோம்” என்ற பெயரில் செய்யப்பட்ட இந்த ஆபத்தான செயல், ஒருவரின் உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்பதை அந்த இளைஞர்கள் உணரவில்லை என்பது இதில் வேதனையான விஷயமாகும்.

“>

இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளப் பயனர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பொழுதுபோக்கிற்காக இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடுவது தற்கொலைக்கு சமம் என்றும், இதை ஒருபோதும் ஊக்குவிக்கக் கூடாது என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

தீக்காயங்கள் ஒருவரது வாழ்க்கையையே சிதைத்துவிடும் ஆற்றல் கொண்டவை என்பதால், இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். வைரலாவதற்காக உயிரைப் பணயம் வைக்கும் இத்தகைய மனப்போக்கு இளைஞர்களிடையே அதிகரித்து வருவது பெரும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.