கர்நாடகா முழுவதும் கட்டுமானத்தில் உள்ள கட்டிடங்களில் ஒட்டப்பட்டுள்ள ஒரு பெண்ணின் விசித்திரமான சுவரொட்டி, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் வசிக்கும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்யும்போது ஒரு விசித்திரமான விஷயத்தைக் கவனித்துள்ளார். கட்டுமானப் பணிகளில் இருக்கும் பெரும்பாலான கட்டிடங்களில், சேலை அணிந்த பெண் ஒருவரின் சுவரொட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. அகன்ற கண்கள் மற்றும் ஆச்சரியமான முகபாவனையுடன் இருந்த அந்தப் படம், எதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது அவருக்குப் புரியவில்லை.
இது குறித்து அவர் ‘கூகுள் லென்ஸ்’ மூலம் தேடியும் சரியான விடை கிடைக்கவில்லை. இறுதியில், கடந்த ஜனவரி 5-ஆம் தேதி அந்தப் புகைப்படத்தை ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டு, இதன் பின்னணி என்ன எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தப் பதிவு குறுகிய காலத்தில் 32 லட்சம் பார்வைகளைக் கடந்து வைரலானது.
I see this woman everywhere in Karnataka outside bangalore where there’s a construction happening. I tried google lens to check for discussions but can’t find any details. Who is she? pic.twitter.com/RAgMDXXJMt
— unc unitechy (@unitechy) January 5, 2026
இந்தப் பதிவிற்குப் பதிலளித்த பல இணையவாசிகள், இது ஒரு வகை திருஷ்ட்டி என்று குறிப்பிட்டனர். பொதுவாக இந்தியாவில் புதிய கட்டிடங்களைக் கட்டும்போது, தீய கண்கள் மற்றும் எதிர்மறை சக்திகளிடமிருந்து சொத்துக்களைப் பாதுகாக்கப் பேய் உருவங்கள் அல்லது பூசணிக்காய்களைத் தொங்கவிடுவது வழக்கம். அதன் ஒரு நவீன வடிவமே இந்தச் சுவரொட்டி எனப் பலர் விளக்கம் அளித்தனர்.
இருப்பினும், அந்தப் படத்தில் இருக்கும் பெண் யார் என்ற கேள்வி நீடித்தது. இதற்கு விடையளிக்கும் வகையில் ஒரு பயனர், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கண்டறியப்பட்ட தகவலைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, அந்தச் சுவரொட்டியில் இருப்பவர் கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் நிஹாரிகா ராவ் என்பது தெரியவந்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில் இடம்பெற்ற அவரது அதிர்ச்சியான முகபாவனை, இணையத்தில் ‘மீம்’ (Meme) ஆகப் பிரபலமானது. அந்தப் படத்தை உள்ளூர் மக்கள் நகைச்சுவையாகவும், அதே சமயம் திருடர்களைப் பயமுறுத்தும் ஒரு ‘பேய் சின்னமாகவும்’ பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
காலப்போக்கில் இந்த மீம் படம், கர்நாடகாவில் பாரம்பரிய திருஷ்டி பொம்மைகளுக்கு மாற்றாக, ‘திருஷ்டி கோம்பே’ என்ற பெயரில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழங்கால மூடநம்பிக்கையுடன் நவீன இணைய கலாச்சாரம் கலந்திருக்கும் இந்த விநோதச் செயல், பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
