இமாச்சலப் பிரதேசத்தின் குலு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மலாணா (Malana) கிராமம், அதன் விசித்திரமான மற்றும் கடுமையான கலாச்சாரக் கட்டுப்பாடுகளால் மீண்டும் இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. அண்மையில் துஷிகா அகர்வால் என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அந்தப் பெண் ஒரு கடையில் பொருள் வாங்கும்போது, பணத்தை நேரடியாகக் கடைக்காரரிடம் கொடுக்காமல் தரையில் வைக்கிறார். கடைக்காரர் அதை எடுத்துக்கொண்டு, மீதிச் சில்லறையையும் தரையிலேயே வைக்கிறார். “என்னைக் கடைக்குள் நுழையக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை” என்று அந்தப் பெண் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tushika Agrawal | Solo Travel (@tushikatalks)

இங்கு வெளியாட்கள் எதைக் தொட்டாலும் அது ‘தீட்டு’ என்று கிராம மக்கள் நம்புகிறார்கள். எனவே, வெளியாட்கள் கிராமத்தினர் மீது படுவது, வீடுகள், சுவர்கள் அல்லது கோவில்களைத் தொடுவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது

பணமோ அல்லது பொருளோ கைமாறும்போது நேரடியாகக் கொடுக்கப்பட மாட்டாது. தரையில் வைத்தே எடுக்கப்படும்.  இந்த கிராமம் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

இவர்களுக்கென்று தனி நிர்வாக அமைப்பு மற்றும் பழங்கால சட்டத்திட்டம் உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை விட, இவர்களின் குலதெய்வமான ‘ஜம்லு தேவதா’வின் கட்டளைகளுக்கே இங்கு அதிக முக்கியத்துவம்.

மாவீரன் அலெக்சாண்டரின் படை வீரர்கள் சிலர் இங்கேயே தங்கிவிட்டதாகவும், தாங்கள் அவர்களின் வாரிசுகள் என்றும் மலாணா மக்கள் நம்புகிறார்கள். தங்களை ஒரு ‘உயர்ந்த இனம்’ என்று கருதுவதால், மற்றவர்களுடனான தொடர்பைத் தவிர்த்துத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள், இது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பிற்போக்குத்தனம் என்று விமர்சிப்பதா அல்லது ஒரு தனித்துவமான கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் முயற்சி என்று பாராட்டுவதா என விவாதித்து வருகின்றனர்.