சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள கியான்லிங் மலைப் பூங்காவிற்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுத் தம்பதி, அங்குள்ள பாதுகாப்புப் பணியாளரிடம் தங்கள் குழந்தைகளை ஒப்படைத்துச் சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அந்தத் தம்பதி, பூங்காவில் உள்ள மலை உச்சிக்குச் செல்லும் கயிற்றுப் பாதையில் பயணம் செய்ய விரும்பினர்.
அப்போது கைக்குழந்தைகளைத் தள்ளுவண்டியுடன் அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால், அங்கிருந்த சென் என்ற பெண் பாதுகாவலரிடம் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். மொழி தெரியாத நிலையிலும் சைகை மூலம் விவரங்களைக் கூறிவிட்டு, தொடர்பு எண்களைக் கூட அளிக்காமல் அவர்கள் சென்றது அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது.
பெற்றோர்கள் சென்ற சிறிது நேரத்தில் ஐந்து மாதங்களே ஆன அந்த இரண்டு குழந்தைகளும் அழத் தொடங்கின. இதைக் கண்ட பூங்காவிற்கு வந்த மற்ற சுற்றுலாப் பயணிகள் உடனடியாக ஓடி வந்து குழந்தைகளைச் சமாதானப்படுத்தினர். ஒருவர் குழந்தைகளைத் தள்ளுவண்டியில் வைத்து தாலாட்ட, மற்றொரு பெண் குழந்தையின் ஈரமான உடைகளை மாற்றி உதவி செய்தார்.
பாதுகாப்புப் பணியாளர் சென் குழந்தைகளுக்குப் பால் புகட்டிப் பராமரித்தார். சுமார் ஒரு மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த தம்பதி, உள்ளூர் மக்களின் அன்பான செயலால் நெகிழ்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். மனிதாபிமானத்திற்கு எல்லைகள் இல்லை என்பதைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
