மோசமான வாய் ஆரோக்கியம் ஒருவரின் ஆயுட்காலத்தை கணிசமாகக் குறைக்கக்கூடும் என்று ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. பற்களின் எண்ணிக்கை குறைதல், வாய் உலர்தல், பேசுவதில் சிரமம் மற்றும் உணவை மென்று விழுங்குவதில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றை “வாய்வழி பலவீனம்” என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆரோக்கியமான வயதான காலத்தில் வாய் ஆரோக்கியம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவருக்குப் பற்கள் அனைத்தும் சரியாக இருந்தாலும், தசைகளின் வலிமை குறைவு அல்லது உமிழ்நீர் சுரப்புப் பிரச்சனை காரணமாக மெல்லுவதில் சிரமம் இருந்தால் அவர்களும் இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்களாகவே கருதப்படுகிறார்கள்.
ஜப்பானில் 65 வயதுக்கு மேற்பட்ட சுமார் பதினோராயிரம் முதியவர்களிடம் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வாய்வழி பலவீனம் உள்ளவர்களுக்கு உடல் ஊனம் ஏற்படும் வாய்ப்பு 23 சதவீதமும், உயிரிழக்கும் அபாயம் 34 சதவீதமும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே, முதியவர்கள் தங்களது ஆரோக்கியத்தையும் சுதந்திரமான வாழ்வையும் நீண்ட காலம் தக்கவைத்துக்கொள்ளத் தொடர்ச்சியாகப் பல் மருத்துவரை அணுகி ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இது தொடர்பான பொது சுகாதாரக் கொள்கைகளை வலுப்படுத்துவது முதியோர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் என்றும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
