இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ் தயாரிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து, மாநிலங்களவை எம்பியும், பாஜக தலைவருமான ராகவ் சத்தாவின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்து. அவரது பதிவில் ‘நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு பஞ்சாபில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகவ் சடா, சமீபத்தில் அக் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியிடப்பட்ட இடம்பெயர்ந்த, இறந்த மற்றும் நகல் வாக்காளர்கள் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முந்தைய வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் 9.7 சதவீதமான 20.66 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ராகவ் சத்தாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள ராகவ், தனது வாக்காளர் அடையாள அட்டை மொகாலியில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தான் ‘இடம்பெயர்ந்துவிட்டதாக’க் கூறி பெயர் நீக்கப்பட்டது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது வெறும் எழுத்துப்பிழை அல்ல என்றும், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சியை நான் விட்டுவிலகியதிலிருந்து, அதன் தலைமை என் மீது கடும் கோபத்தில் உள்ளது. எங்களை மௌனமாக இருக்கச் சொல்லிக் கட்டளையிட முடியாததால், பஞ்சாப் அரசும் அதன் நிர்வாக இயந்திரங்களும் எங்களுக்கு எதிராக ஏவப்பட்டுள்ளன. என்னைப்போல ஆம் ஆத்மியை விட்டுவிட்டு பாஜகவில் இணைந்த பிற எம்பிக்களும் பஞ்சாப் அரசால் குறிவைக்கப்படுகின்றனர். இந்தத் தவறான வகைப்பாடு அந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்” என்று அவர் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம், மற்ற ஆறு மாநிலங்களவை எம்பிக்களுடன் இணைந்து ராகவ் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். கட்சி அதன் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் ஒழுக்கத்திலிருந்து முற்றிலும் விலகிவிட்டதாக அப்போது அவர் காரணம் கூறியிருந்தார். மறுபுறம், ராகவ் ஒரு ‘சுயநலவாதி’ என்று குற்றம் சாட்டிய ஆம் ஆத்மி, முக்கிய அரசியல் போராட்டங்களின்போது அவர் தலைமறைவாக இருந்ததைச் சுட்டிக்காட்டியது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள், எம்எல்ஏக்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு ‘பாதுகாக்கப்பட்ட பட்டியல்’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் விதிகள்கூட தன் விஷயத்தில் வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளதாக ராகவ் குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாபின் வரைவு வாக்காளர் பட்டியல் என்பது ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தனிப்பட்ட சொத்து கிடையாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான கோரிக்கைகள் மற்றும் முறையீடுகளைத் தெரிவிப்பதற்கான அவகாசம் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை திறந்திருக்கும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் 2026 அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் பெயர் நீக்கப்பட்டிருந்தாலும், அது அவரது ராஜ்ய சபா எம்பி பதவியின் தகுதியைப் பாதிக்காது. மாநிலங்களவை வேட்பாளர் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலத்தின் வாக்காளராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம், கடந்த 2003-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
