கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம் வண்டூர் பகுதியில், மதிய உணவில் குழம்பு இல்லை என்ற சாதாரணத் தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில், 38 வயது மனைவியைக் கணவனே கத்தியால் குத்தி  கொன்றுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மலப்புறம் மாவட்டம் கப்பில் பகுதியைச் சேர்ந்தவர் ஃபாசீலா (38). இவரது கணவர் குன்னும்மால் ரஷீத் (48). கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில், ரஷீத் மது அருந்திய போதையில் வேலை முடித்து வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த மனைவியிடம் மதிய உணவில் கறிகுழம்பு வைக்கப்படவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்தச் சண்டை சிறிது நேரத்தில் தீவிரமடைய, ஆத்திரமடைந்த ரஷீத் தன் கைவசம் இருந்த கத்தியைக் கொண்டு ஃபாசீலாவின் நெஞ்சுப் பகுதியில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஃபாசீலா பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கொலையில் ஈடுபட்ட ரஷீதைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரஷீத் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், போதைக் பழக்கத்தினால் இவர்களது குடும்பத்தில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற ஒரு அதிர்ச்சிச் சம்பவம் சில நாட்களுக்கு முன்பு பீகாரில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 30-ஆம் தேதி, உணவு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் ஹேமந்த் பூமிஜா என்ற நபர் தனது 25 வயது மனைவி சபிதா பூமிஜாவை மரக்கட்டையால் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.