இன்றைய இளைய தலைமுறை சோசியல் மீடியா மோகத்திலும், லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக வீண் ரகளைகளிலும் தங்களது நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் சூழலில், வெறும் 20 வயதே ஆன பிட்டு தபாஹி என்ற இளைஞர் ஆற்றியுள்ள மகத்தான சமூகப் பணி ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மேலும் தன் பகுதியில் முற்றிலும் குப்பைகளாலும் கழிவுகளாலும் பாழடைந்து, சாக்கடையாக மாறிக் கிடந்த ஒரு நதியைத் தன் சொந்த உழைப்பால் ஒற்றை ஆளாகச் சுத்தப்படுத்தி, அதற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார். அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் மட்டுமே எதிர்பார்த்துக் காத்திராமல், சுற்றுச்சூழல் மீது கொண்ட பேரன்பால் இந்த இளைஞர் செய்துள்ள காரியம், இன்றைக்கு சோசியல் மீடியாவில் அவரை உண்மையான “ரியல் ஹீரோவாக” உயர்த்திப் பிடிக்கச் செய்துள்ளது.
பிட்டு தபாஹி தனது 20-வது வயதிலேயே சமூகப் பொறுப்புணர்ச்சியோடு கையில் எடுத்த இந்த நதி சுத்திகரிப்புப் பணி ஒன்றும் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. நதியில் தேங்கிக் கிடந்த நெகிழிப் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் துர்நாற்றம் வீசியக் குப்பைகளை தினமும் பல மணி நேரம் கடுமையாக உழைத்துத் தனியாகவே அப்புறப்படுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் இதைப் பார்த்த சிலர் இவரை ஏளனம் செய்த போதிலும், தன் இலக்கில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து உழைத்ததன் பலனாக, கழிவுகள் நிறைந்திருந்த நதி இன்று பளிச்சிடும் நன்னீரோடையாக மாறியுள்ளது. இவருடைய இந்த விடாமுயற்சியையும் அர்ப்பணிப்பையும் கண்டு வியந்த கிராம மக்களும் நெட்டிசன்களும், இவரை இயற்கை தந்த வரப்பிரசாதம் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
அரசாங்க அமைப்புகளும் பெரிய தொண்டு நிறுவனங்களும் செய்யத் தயங்கும் அல்லது தள்ளிப்போடும் ஒரு மிகப்பெரிய பணியை, ஒரு சாதாரண இளைஞன் தன் சாதுரியத்தாலும் உழைப்பாலும் சாதித்துக் காட்டியிருப்பது இயற்கையைப் பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய விழிப்புணர்வாக அமைந்துள்ளது.
மேலும் பிட்டு தபாஹியின் இந்த அசாத்திய சாதனைச் செய்தி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “இவரைப் போன்ற இளைஞர்கள்தான் இந்தியாவின் உண்மையான சொத்து” என்று சமூக ஆர்வலர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். வெறும் பேச்சு வார்த்தைகளோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கிச் செயலாற்றினால் எந்த ஒரு மாற்றத்தையும் சாத்தியப்படுத்த முடியும் என்பதற்கு இந்தச் சம்பவமே சான்றாக நிற்கிறது.
