அமெரிக்க ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலாவிடம் சீனாவிடம் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன ரேடார் கருவிகள் இருந்தபோதிலும், அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தலைநகர் கராகஸுக்குள் எந்தவிதத் தடையுமின்றி நுழைந்துள்ளன. ‘ஸ்டீல்த் ஹண்டர்’ என்று வர்ணிக்கப்பட்ட சீனத் தயாரிப்பு ரேடார்கள், அமெரிக்காவின் மின்னணு ஜாமிங் தாக்குதலால் செயலிழந்ததே இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதனால் தென் அமெரிக்காவின் வலிமையான வான் பாதுகாப்பு வலையமைப்பு என்று கருதப்பட்ட அமைப்பு சில மணி நேரங்களிலேயே சீர்குலைந்தது. சீனத் தயாரிப்பு ராணுவத் தளவாடங்களின் நம்பகத்தன்மை குறித்து எழுந்துள்ள இந்தக் கேள்விகள் சர்வதேச அளவில் விவாதமாகியுள்ளன.

குறிப்பாக, கடந்த 2025ம் ஆண்டு இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தானிடம் இருந்த சீன ரேடார்களும் இதேபோல் தோல்வியடைந்ததை ராணுவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். போர்க்களத்தில் நிஜமான சவால்களை எதிர்கொள்ளும்போது சீனத் தொழில்நுட்பம் பலவீனமடைவது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, சீனாவிலிருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும் சூழல் உருவாகியுள்ளது.