போதைப்பொருள் கடத்தல் புகாரில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைது செய்துள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது அமைச்சரவை மீது அமெரிக்கா நீண்டகாலமாகப் போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அமெரிக்க உளவுத்துறை மற்றும் ராணுவப் படையினர் இணைந்து வெனிசுலா தலைநகர் கராகஸில் அதிரடித் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலின் போது அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்தன. பின்னர் அவர்கள் போர்க்கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் வாயிலாக அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டனர். தற்போது புரூக்ளினில் உள்ள போதைப்பொருள் தடுப்பு முகமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட கொலம்பியா கோரிக்கை விடுத்தது. அதன்படி நடைபெற்ற கூட்டத்தில், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷியா, சீனா மற்றும் கொலம்பியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் உரையை வாசித்த துணைப் பொதுச் செயலாளர் ரோஸ்மேரி டிகாப்லோ, “ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரத்தை மதிக்க வேண்டும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச உறவுகளில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடும்,” என எச்சரித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ்: “இது வெனிசுலா நாட்டுக்கு எதிரான போர் அல்ல. அமெரிக்க நீதித்துறையால் தேடப்பட்டு வந்த இரு குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துல்லியமான சட்ட நடவடிக்கை மட்டுமே. நாங்கள் அந்த நாட்டை ஆக்கிரமிக்கவில்லை,” எனத் தெரிவித்தார். இருப்பினும், ஒரு நாட்டின் தற்போதைய அதிபரையே மற்றொரு நாடு ராணுவத்தை அனுப்பிக் கைது செய்திருப்பது சர்வதேச அரசியலில் மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
