வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பத்திரிகையாளரும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவருமான ராணா பிரதாப் பைராகி (45) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் மணிரம்பூர் பகுதியில் உள்ள கோபாலியா சந்தையில் இன்று (ஜன. 5) இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. ‘பிடி கோபோர்’ (BD Khobor) என்ற நாளிதழின் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்த ராணா பிரதாப், அப்பகுதியில் பனிக்கட்டி தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வந்தார்.
இன்று காலை அவர் பணியில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் ராணா பிரதாப்பின் தலையில் பலமுறை சுட்டுவிட்டுத் தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திலிருந்து போலீசார் 7 காலித் தோட்டக்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து அந்த நாளிதழின் செய்தி ஆசிரியர் அபுல் காஷேம் கூறுகையில், “கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பிரதாப் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்குத் தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். எனினும், திட்டமிட்டே இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளதாகப் பத்திரிகையாளர் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில், கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை 5 இந்துக்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் வங்கதேச இந்துக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
