கல்வியை ஒரு கருவியாகக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டால், மாணவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன் இந்தச் சமூகமும் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும் என்று நடிகர் கார்த்தி பேசினார்.

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி (Laptop) வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களிடையே உரையாற்றிய அவர், “பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்கள் என்று தெரிந்தால், தனது சொத்தை விற்றாவது அவர்களைப் பெரிய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற தியாக உள்ளம் கொண்டவர்கள் நிறைந்த ஊர் நமது தமிழகம்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் தற்காலச் சூழலில், மாணவர்களின் கல்வித் தேவையைக் கருத்தில் கொண்டு அரசு மடிக்கணினிகளை வழங்குவது மிகவும் பாராட்டத்தக்கது என்றும், இதனை மாணவர்கள் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தித் தங்களது அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.