நடிகர் விஜய் நடித்து, ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் நீடித்து வருகின்றன. தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) கிடைப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக, படக்குழுவினர் நீதிமன்றத்தை நாடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது‌.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ஆம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்த டிசம்பர் 19-ஆம் தேதியே படம் தணிக்கை குழுவிற்கு (CBFC) அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் சில காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கப் பரிந்துரைத்தனர். அந்த மாற்றங்களைச் செய்து மீண்டும் சமர்ப்பித்த பின்னரும், இதுவரை படத்திற்குச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதம் படக்குழுவினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சட்ட ரீதியாக இந்தச் சிக்கலை எதிர்கொள்ளவும், நீதிமன்றத்தை நாடித் தீர்வு காணவும் படத் தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

தணிக்கைச் சான்றிதழ் முறைப்படி கையில் கிடைத்த பின்னரே திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவைத் தொடங்க முடியும் என்பது விதியாகும். தற்போது நிலவும் இழுபறியால், தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கப்படாமல் உள்ளது. இது விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் இந்த விவகாரம் குறித்துக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். விஜய் அரசியல் கட்சித் தொடங்கி தீவிரமாகச் செயல்பட்டு வருவதால், அரசியல் உள்நோக்கத்தோடு படத்திற்குச் சான்றிதழ் வழங்கத் தடை ஏற்படுத்தப்படுவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாகப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், திட்டமிட்டபடி ஜனவரி 9-ஆம் தேதி படம் வெளியாகுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.