இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எம்கோனே’ பாடலில் இருந்து பாடகி சின்மயின் குரல் நீக்கப்படுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘திரௌபதி’, ‘ருத்ரதாண்டவம்’, ‘பகாசூரன்’ போன்ற படங்களால் கவனம் ஈர்த்த மோகன் ஜி, தற்போது அதன் தொடர்ச்சியாக ‘திரௌபதி 2’ படத்தை இயக்கியுள்ளார்.
ஜிப்ரான் இசையமைப்பில் சின்மயி பாடிய இப்பாடல் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் சித்தாந்தங்களுடன் தனக்கு முரண்பாடுஇருப்பதாகக் கூறி சின்மயி சமூக வலைதளங்களில் மன்னிப்பு கேட்டிருந்தார்.
இது படக்குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்தப் பாடலில் இருந்து அவரது குரலை நீக்கிவிட்டு, வேறொரு முன்னணி பாடகியைக் கொண்டு மீண்டும் பதிவு செய்ய இயக்குநர் முடிவு செய்துள்ளார்.
சின்மயின் இந்தச் செயல் படத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி, இயக்குநர் மோகன் ஜி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சோழ சக்கரவர்த்தி ஆகியோர் இது தொடர்பாகத் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து மோகன் ஜி கூறுகையில், “சின்மயி தனது பதிவை நீக்கக் கால அவகாசம் அளித்தும் அவரிடமிருந்து எவ்விதப் பதிலும் வரவில்லை. எங்களது உழைப்பைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும், படத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகவும் அவர் செயல்பட்டுள்ளார்.
எனவே, பெப்சி (FEFSI) அமைப்பின் மூலம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இனி படத்தில் சின்மயின் குரல் இடம்பெறாது; அவருக்குப் பதிலாகப் புதிய பாடகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்”எனத் தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதியில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தைச் சுற்றி எழுந்துள்ள இந்த விவகாரம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
