தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே கள்ளக்காதல் மோதலில் சலூன் கடை ஊழியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரங்கா ரெட்டி மாவட்டம் வெங்கடாபுரத்தைச் சேர்ந்த ஜம்புல மகேஷ் (24) என்ற வாலிபர், கவேலிகூடா பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், உயிரிழந்த மகேஷ் அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் நாகலட்சுமி என்ற பெண்ணுடன் ரகசியத் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
நாகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அவருக்கும் ரத்தினம் என்ற மற்றொரு நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முக்கோணக் காதல் விவகாரமே இந்தக் கொலைக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற மகேஷை ரத்தினம் பின்தொடர்ந்து சென்று வழிமறித்துள்ளார்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து, திடீரென மகேஷின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி, மறைத்து வைத்திருந்த கோடாரியால் தாக்கியுள்ளார். நிலைகுலைந்து கீழே விழுந்த மகேஷை, ரத்தினம் கத்தியால் கழுத்தை அறுத்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், உயிரிழந்த மகேஷின் செல்போன் உரையாடல்கள் மற்றும் ஆதார அட்டையை வைத்து நாகலட்சுமியைக் கண்டுபிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரத்தினம் பிடிபட்டார். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களைச் சிறையில் அடைத்தனர்.
