சீனாவின் பிரபல பிஒய்டி (BYD) ரக கார் ஒன்றில் பயணம் செய்த ஒரு தம்பதியிடையே, காரில் உள்ள ஏஐ (AI) உதவியாளர் கொடுத்த பதில்கள் தற்போது இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தனது கணவர் தனக்குத் தெரியாமல் வேறு பெண்களைக் காருக்குள் அழைத்து வந்தாரா என்று அந்த மனைவி காரின் ஏஐ உதவியாளரான ‘சியாவ் ஃபாங்’கிடம் வேடிக்கையாகக் கேட்க, அதற்கு அந்த ரோபோ கொடுத்த பதில்கள் கணவரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

“உங்கள் கணவர் யாரையாவது அழைத்து வந்தாரா என்று என்னால் நேரடியாகச் சொல்ல முடியாது, ஆனால் அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று எனக்குத் தெரியும்” எனத் தொடங்கிய அந்த ஏஐ, கணவர் வசமாகச் சிக்கக்கூடிய பல ரகசிய டிப்ஸ்களை அடுக்கத் தொடங்கியது.

 

View this post on Instagram

 

A post shared by China Insider (@chinainsider)

முதலில் காரின் நேவிகேஷன் வரலாற்றைச் சோதியுங்கள், வழக்கத்திற்கு மாறாகத் தேவையில்லாத இடங்களுக்குச் சென்றிருந்தால் அவரிடம் விளக்கம் கேளுங்கள் என்று அந்த ஏஐ அதிரடியாகக் கூறியது.

அதுமட்டுமின்றி, கார் திடீரென மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டாலோ அல்லது காருக்குள் வாசனை திரவியங்கள், தண்ணீர் பாட்டில்கள் அதிகமாக வைக்கப்பட்டிருந்தாலோ உங்கள் கணவர் மீது சந்தேகம் கொள்ளலாம் என்றும் அந்த ரோபோ புத்திமதி கூறியது.

இதைக் கேட்ட மனைவி சிரித்துக்கொண்டே சிற்றுண்டி அருந்த, அருகில் காரை ஓட்டிக்கொண்டிருந்த கணவர் பதற்றத்தை மறைத்துக்கொண்டு போலிச் சிரிப்புடன் அமர்ந்திருக்கும் வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.