தமிழ்நாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எத்தனை முறை வந்தாலும், அவரது வருகை ‘இந்தியா’ கூட்டணிக்கே வலு சேர்க்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ‘தேசிய ஜனநாயக கூட்டணி’ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறுகிறார். ஆனால், அந்த மேடையில் அதிமுக உள்ளிட்ட எந்தக் கட்சியும் பங்கேற்கவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனித்துப் போட்டியிட்டு ஆட்சி அமைப்போம் என்கிறாரே தவிர, பாஜக கூட்டணி பற்றிப் பேசவில்லை. பாஜக – அதிமுக கூட்டணி எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறது என்பதே தெரியாமல் குழப்பம் நீடிக்கிறது.

அமித்ஷா ஊழலைப் பற்றிப் பேசுவது ‘சாத்தான் வேதம் ஓதுவது’ போல உள்ளது. தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து சுமார் 6,088 கோடி ரூபாய் நன்கொடையைப் பாஜக குவித்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த நிறுவனங்களிடமிருந்து இத்தகைய நிதியைப் பெறுவது அப்பட்டமான ஊழல் இல்லையா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 11 ஆண்டுக்கால பாஜக ஆட்சியில் நாட்டின் கடன் 200 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. உலக வறுமைக் குறியீடு, பத்திரிகை சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவம் என அனைத்து சர்வதேச தரவரிசைகளிலும் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக உயர்ந்து, தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட 1.6 மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழகம் வழங்கும் வரிப்பணத்தில் மிகக் குறைந்த அளவே (4 சதவீதம்) மாநிலத்திற்குத் திருப்பித் தரப்படுகிறது.

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால், சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கான ரூ.2,152 கோடி நிதியை வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்காமல் சமஸ்கிருதத்திற்கு வாரி வழங்குவது, இந்தித் திணிப்பு போன்ற செயல்களில் பாஜக ஈடுபடுகிறது.

இத்தகைய மக்கள் விரோதச் செயல்பாடுகளைக் கொண்ட பாஜகவையும், அதனுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவையும் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என செல்வப்பெருந்தகை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.