கர்நாடக மாநிலம் பிதர் மாவட்டத்தில் நடைபெற்ற காலாண்டு வளர்ச்சிப் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் சித்து பாட்டீல் மற்றும் காங்கிரஸ் மேலவை உறுப்பினர் பீம்ராவ் பாட்டீல் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிதர் மாவட்ட ஊராட்சி அரங்கில் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் ஈஸ்வர் காந்திரே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஹுமனாபாத் தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் வன நில ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது இரு மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தரக்குறைவாகப் பேசிக்கொண்டனர்.
ஆத்திரமடைந்த பீம்ராவ் பாட்டீல் திடீரென இருக்கையை விட்டு எழுந்து சென்று சித்து பாட்டீலைத் தாக்க முற்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது. அங்கிருந்த காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனடியாகத் தலையிட்டு, இருவரையும் தடுத்து நிறுத்திச் சமாதானப்படுத்த முயன்றனர். அமைச்சர் ஈஸ்வர் காந்திரே இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தப் போராடியும், வாக்குவாதம் நீடித்ததால் கூட்டத்தை பாதியிலேயே ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு அவர் வெளியேறினார்.
மக்கள் முன்னிலையிலும், அரசு அதிகாரிகள் முன்னிலையிலும் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் இருவர் இவ்வாறு மோதிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும், மக்கள் பணிகளை விவாதிக்க வேண்டிய இடத்தில் இது போன்ற அநாகரிகமான செயல்கள் அரங்கேறுவது கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளனர்.
