டெல்லியின் லட்சுமி நகர் பகுதியில் தொழில் போட்டி காரணமாக ஒரு குடும்பத்தினர் பொதுவெளியில் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அவர்களின் ஆடைகளை அவிழ்த்து அவமானப்படுத்தப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர் ராஜேஷ் கார்க் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது வீட்டின் அடித்தளத்தில் ஒரு உடற்பயிற்சி கூடத்தை (Gym) நடத்தி வருகிறார். அந்த ஜிம்மின் பராமரிப்பாளராக இருந்த சதீஷ் யாதவ் என்பவருடன், தொழிலைக் கைப்பற்றுவது தொடர்பாக கார்க்கிற்கு நீண்ட நாட்களாகத் தகராறு இருந்து வந்துள்ளது.

கடந்த ஜனவரி 2-ஆம் தேதி, தண்ணீர் கசிவைச் சரிபார்ப்பதாகக் கூறி ராஜேஷ் கார்க் மற்றும் அவரது மனைவி அடித்தளத்திற்குச் சென்றனர். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த சதீஷ் யாதவ் மற்றும் அவரது ஆட்கள், ராஜேஷ் கார்க்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கத் தொடங்கினர்.

ராஜேஷ் கார்க்கின் மனைவி செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்கள் சொந்தச் சொத்தில் நாங்கள் நிற்கக் கூடாதா? விகாஸ் யாதவ், பிந்து யாதவ் மற்றும் சுபம் யாதவ் ஆகியோர் என் கணவரைத் தாக்கினர். என்னைத் தலைமுடியைப் பிடித்து இழுத்து, வயிற்றில் உதைத்தனர். நான் உதவிக்காகக் காவல் நிலையத்திற்கு ஓடிய நேரத்தில், அவர்கள் என் மகனை வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்றனர்” எனத் தெரிவித்தார்.

 

வீட்டின் வெளியே இழுத்து வரப்பட்ட ராஜேஷ் கார்க்கின் மகனை, அந்தக் கும்பல் பொதுமக்களின் முன்னிலையிலேயே ஆடைகளைக் கழற்றி நிர்வாணப்படுத்தியது. மேலும் அவரைச் சாலையில் இழுத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, பல் உடைந்தது. மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவர் கைகளைக் கூப்பி உயிர்பிச்சை கேட்டுக் கெஞ்சியதாகப் பாதிக்கப்பட்ட தாய் வேதனையுடன் தெரிவித்தார்.

“இன்னும் 10 நாட்களில் என் மகனுக்குத் திருமணம் நடைபெற உள்ளது. ஆனால், இந்த அவமானத்திற்குப் பிறகு என் மகன்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்களின் செல்போன்கள் அணைக்கப்பட்டுள்ளன” என ராஜேஷ் கார்க் கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியக் குற்றவாளியான யாதவ் என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் மூன்று பேரைத் தேடி வரும் போலீஸார், அந்தப் பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்