தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் மக்கள் விரும்பும் ஒரு பலமான கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும், அந்த ஆட்சியில் தேமுதிக அமைச்சரவையில் அங்கம் வகிக்கப் போவது உறுதி என்றும் அவர் கூறினார்.

தற்போது தமிழக அரசியலில் ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை வலுவாக ஒலித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கான சாத்தியக்கூறுகள் வரும் தேர்தலில் அதிகம் இருப்பதாகவும், கூட்டணிகள் அமையும் போது இது குறித்த தெளிவான விடை மக்களுக்குத் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த காலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படும் வரலாற்றை நினைவுகூர்ந்த பிரேமலதா, அதிமுக மட்டுமே தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சி செய்ததாகக் குறிப்பிட்டார். ஆளும் கட்சி மீது ஐந்து ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு எதிர்ப்பு கிளம்புவது இயல்பு என்பதால், இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் கூறுவதாகவும், அதே சமயம் மீண்டும் தங்கள் ஆட்சியே தொடரும் என்று ஆளுங்கட்சியினர் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வரும் தை மாதம் பிறந்தால் தமிழகத்திற்கும் அதன் மக்களுக்கும் ஒரு நல்ல வழி பிறக்கும் என்று தெரிவித்த அவர், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் ஒரு தேர்தலாக 2026 தேர்தல் அமையும் என்று தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.