கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாட் தாலூகா அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொண்ட இரண்டு நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி டயாலிசிஸ் செய்து கொண்ட ஹரிப்பாடைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் காயம் குளம் பகுதியைச் சேர்ந்த மஜீத் ஆகியோருக்கு திடீரென காய்ச்சல், வாந்தி மற்றும் உடல் நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலைமை மோசமானதையடுத்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். டயாலிசிஸ் சிகிச்சையின் போது ஏற்பட்ட தீவிர அணுபாத்தே இந்த மரணங்களுக்குக் காரணம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் டயாலிசிஸ் பிரிவு ஊழியர்கள் மீது ஹரிப்பாட் போலீசார் மருத்துவ கவனக்குறைவு மற்றும் உயிருக்கு ஆபத்து விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டயாலிசிஸ் என்பது சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையாக இருந்தாலும், ரத்தத்துடன் நேரடித் தொடர்பு இருப்பதால் இதில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
இந்த விபரீதத்தைத் தொடர்ந்து அந்த மருத்துவமனையின் டயாலிசிஸ் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த மற்ற நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த மருத்துவக் குழுவை அமைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளதுடன், மாநில சுகாதாரத் துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
