தெலங்கானா சட்டப்பேரவையில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு தொடர்பான விவாதத்தின் போது, எதிர்க்கட்சியினரை நோக்கி “நாக்கை வெட்டிவிடுவேன்” என்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறையைத் தூண்டும் பேச்சைக் கண்டித்து பி.ஆர்.எஸ். உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் பாசனத் திட்டங்கள் மற்றும் நதி நீர் பங்கீடு குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த பி.ஆர்.எஸ். அரசு எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து ஆவேசமாகப் பேசிய அவர், “எங்கள் அரசின் அர்ப்பணிப்பு குறித்தோ, விவசாயிகள் மீது எங்களுக்கு இருக்கும் அக்கறை குறித்தோ யாராவது கேள்வி எழுப்பினால், அவர்களின் தோலை உரிப்பது மட்டுமல்ல, நாக்கையும் வெட்டுவோம். நீங்கள் எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; ஆனால் எங்கள் விசுவாசத்தைக் கேள்வி கேட்டால் உங்கள் நாக்கு துண்டிக்கப்படும்” என எச்சரித்தார்.
தனது பேச்சைத் தொடர்ந்த முதல்வர், “சபாநாயகர் அவர்களே, இந்தப் பேச்சை நீங்கள் வேண்டுமானால் அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிடலாம். ஆனால், பொதுமக்களின் மனதில் உண்மையை அழுத்தமாகப் பதிய வைப்பதற்காகவே நான் இவ்வாறு பேசுகிறேன்” என்றார். மேலும், முன்னாள் முதல்வர் கே.சி.ஆர். மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை மறைமுகமாகக் குறிப்பிட்டு விமர்சனம் செய்தார்.
முதலமைச்சரின் இந்தப் பேச்சு “மலிவானது” என்றும், ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது என்றும் பி.ஆர்.எஸ். கட்சி சாடியது. “முதல்வர் பதவிக்கு அழகல்லாத வார்த்தைகளை ரேவந்த் ரெட்டி பயன்படுத்துகிறார்” எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறினர். பி.ஆர்.எஸ். தலைவர் தாசோஜு ஸ்ரவன் குமார் கூறுகையில், “இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
பா.ஜ.க. தேசிய தலைமை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்:
“காங்கிரஸ் கட்சி தெலங்கானா சட்டமன்றத்தைத் தெருமுனைச் சந்திப்பு போல மாற்றிவிட்டது.”
“மூத்த தலைவர்களான கே.டி. ராமாராவ் மற்றும் ஹரீஷ் ராவ் ஆகியோருக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுவது ரேவந்த் ரெட்டியின் ஆணவத்தையும், சகிப்புத்தன்மையின்மையையும் காட்டுகிறது.”
“ஜனநாயக விழுமியங்களுக்குக் காங்கிரஸ் கட்சியில் இடமில்லை என்பதற்கு இதுவே சாட்சி” எனக் குறிப்பிட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு தேசிய அளவில் அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாற்றியுள்ளது.
மேலும் இதேபோன்று முன்னதாக பட்டப் பகலில் பசு பூஜையின் போது தன்னுடைய பாதுகாவலர் ஒருவரை ரேவந்த் ரெட்டி அடுத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
