தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தின் மீதான விமர்சனங்கள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் டிக்கெட் விற்பனை தொடர்பாகப் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் எழுப்பியுள்ள கேள்விகள் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

அரசியலில் முழுமையாகக் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ள நடிகர் விஜய், தனது கடைசித் திரைப்படமாக ‘ஜனநாயகன்’ படத்தை அறிவித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஒரு போலீஸ் அதிரடித் திரைப்படமாக உருவாகியுள்ளது. அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் வியாழக்கிழமை (ஜன. 9) படம் திரைக்கு வர உள்ளது.

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்திற்கான சென்சார் சான்றிதழ் (Censor Certificate) இன்னும் முறைப்படி கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கான (Special Shows) அனுமதியை அரசு இன்னும் வழங்கவில்லை. ஒருவேளை அனுமதி கிடைத்தாலும், காலை 9 மணி காட்சிக்கே வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்தச் சூழலில், நெல்லை ராம் முத்துராம் திரையரங்கு உள்ளிட்ட சில இடங்களில் சென்சார் சான்றிதழ் வருவதற்கு முன்பே ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் விஜய்யைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

“சென்சார் சான்றிதழ் மற்றும் அரசு அனுமதி வருவதற்கு முன்பே டிக்கெட்டுகளை விநியோகம் செய்வது ஏன்? சட்டத்தையும் அரசையும் திரையரங்குகள் மதிப்பதில்லையா?”

“தன் படம் சார்ந்த இத்தகைய விதிமீறல்களைக் கேள்வி கேட்காமல், பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் பாணியில் விஜய் ‘மிக்சர்’ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.”

“அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு டிக்கெட் வாங்கும் ரசிகர்கள் ஒருபுறம், இதனைத் தட்டிக்கேட்காத திமுக அரசு மறுபுறம் என அனைத்தும் முறையற்றதாக உள்ளது.”

“ஊழலை ஒழித்து முதல்வர் ஆகப்போவதாகக் கூறும் விஜய், தனது பட விவகாரத்தில் நடக்கும் குளறுபடிகளை ஏன் கண்டுகொள்ளவில்லை?”

விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு வெளியாகும் படம் என்பதால், அரசியல் ரீதியாகவும் இந்தப் படம் உற்றுநோக்கப்படுகிறது. சென்சார் மற்றும் சிறப்புக் காட்சி அனுமதி விவகாரத்தில் நிலவும் இழுபறி, திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்ற கேள்வியைத் திரைத்துறையினர் மத்தியில் எழுப்பியுள்ளது.