தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக கைகாட்டுபவரே முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும், அமையப்போகும் கூட்டணி ஆட்சியில் அமமுக முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்து அவர் விரிவாகப் பேசினார்.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்ற கருத்தை முன்வைத்திருந்த நிலையில், அதற்கு வலுசேர்க்கும் வகையில் டிடிவி தினகரனின் பேச்சு அமைந்திருந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இது தொடர்பாக டிடிவி தினகரன் பேசியதாவது, நமக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை முக்கியமல்ல, லட்சியமே முக்கியம். அமமுக இடம்பெறும் கூட்டணி வரும் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்.”
“தினகரனின் கூடாரம் காலியாகிவிட்டது என்று விமர்சித்தவர்கள், இன்று ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்கின்றனர். தெளிந்த நீரோடை போலச் செயல்படும் அமமுக-வால்தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.”
“யாரிடமும் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாத இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவின் பெயரில் இந்த இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது.”
தொடர்ந்து பேசிய அவர், “2026 தேர்தலில் அமமுக யாரைக் கைகாட்டுகிறதோ, அவரே முதலமைச்சர் என்பது இயற்கை எழுதியுள்ள தீர்ப்பு. தமிழகத்தில் அமையப்போகும் கூட்டணி ஆட்சியில் அமமுக நிச்சயம் அங்கம் வகிக்கும். தொண்டர்களின் மன ஓட்டத்தை அறிந்து வெற்றிக் கூட்டணியில் இணைவோம்” என்றார்.
மதச் சார்பற்ற அரசியலை வலியுறுத்திய அவர், “மதம், சாதி, கடவுள் பெயரில் பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் தமிழகத்தில் எக்காலத்திலும் எடுபடாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் அமமுக கூட்டணி அமைப்பதற்கான சமிக்ஞையாகவே டிடிவி தினகரனின் இந்தப் பேச்சு பார்க்கப்படுகிறது.
